ராணிபேட்டை: எதிர்காலத்தில் ஆரோக்கியத்துக்கும் விளையாட்டுக்கும் தூதுவராக ராணிப்பேட்டை விளங்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தெரிவித்தார்.
ராணிபேட்டையில் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரி விளையாட்டு மைதானம் ராணிப்பேட்டை சிப்காட் சாலையில் அமைந்துள்ளது இந்த மைதானம் தற்போது புதுப்பிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்த விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மைதானத்தைத் திறந்து வைத்துப் பேசியதாவது, ராணிப்பேட்டை நகரில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த விளையாட்டு மைதானத்தில் நான் கடந்த ஓராண்டாகப் பயிற்சி செய்து வருகிறேன் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தாலும் பொதுமக்களும் மைதானத்தைப் பயன்படுத்த அனுமதித்துள்ளதை வரவேற்கிறேன்.

இந்த மைதானத்தில் போதிய வசதிகள் இல்லை என்றும் இதைப் புதுப்பித்துத் தேவையான வசதிகள் செய்து தரும்படி கேட்டுக் கொண்டதின் பேரில் ரூ.10 லட்சம் செலவில் புதுப்பித்துத் தந்துள்ளனர் ஏனெனில் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பங்களிப்பை அளிக்கும் பொருட்டு பொறுப்புணர்வு உள்ளது அந்த வகையில் இந்த விளையாட்டு மைதானம் சீரமைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு மைதானம் என்பது ஒரு குறிப்பிட்ட விளையாட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இல்லாமல் அனைத்து வகையான விளையாட்டிற்கும் பயிற்சி பெறக்கூடிய வகையில் இருக்க வேண்டும் அந்த வகையில் கிரிக்கெட் கால்பந்து வாலிபால் நீளம் தாண்டுதல் ஓடுதளம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் இங்கே செய்து கொடுத்துள்ளனர்.

இதன்மூலம் குறிப்பிட்ட நிறுவனத்தில் பொறுப்பு நிறைவடைந்துள்ளது அதே நேரத்தில் இந்த விளையாட்டு மைதானத்தைப் பாழ்படுத்தாமல் இதன் புனிதம் கெடாமல் பாதுகாக்கும் பொறுப்புணர்வு பொது மக்களுக்கும் இருக்க வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டம் எதிர் காலத்தில் ஆரோக்கியத்திற்கும் விளையாட்டிற்கும் தூதுவராக விளங்க வேண்டும் என்றார்.