வேலூர்: உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார் என்றும், 'பசியால் பரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்' என்றும் அன்னதானத்தின் சிறப்பைப் பற்றி நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அப்படி உறவு இல்லாமல், உணவு இல்லாமல் தவித்துவருவோருக்கு கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து உணவளித்து வருகின்றனர் வேலூரை சேர்ந்த ஒரு தம்பதி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், புவனேஸ்வரி பேட்டையில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் பாபுசிவம் - ராதிகா தம்பதி. பாபுசிவம் அதேப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்து வருகிறார்.
இத்தம்பதி வசதி வாய்ப்புகள் இல்லாமல் சிறிய வாடகை வீட்டில் வசித்து வந்தாலும், உணவின்றி, அவதியுறும் முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், சுமார் 15 ஆண்டுகளாகத் தேடி தேடி உணவளித்து வருகின்றனர். வீட்டில் தினமும் பார்த்துப் பார்த்துச் சமைத்து, அதனைப் பொட்டலங்களில் கட்டி, இருசக்கர வாகனத்திலேயே சென்று பேருந்து நிலையம், கோவில், போன்ற இடங்களில் உள்ள முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளித்து வருகின்றனர்.
மேலும் சிலர் பிறந்தநாள், திருமணநாள், முன்னோர் நினைவு நாள் போன்ற நாட்களில், உணவு வழங்குவதற்காக இவர்களுக்குப் பண உதவி செய்தும் வருகின்றனர். கடினமான கொரோனா காலகட்டத்திலான ஊரடங்கு நேரங்களிலும் பாபுசிவம் - ராதிகா தம்பதியினர் ஓய்வெடுக்காமல் இயலாதோருக்கு உணவளித்து வந்துள்ளனர். இவர்களது இந்தச் செயலைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகளும் பல்வேறு விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளனர். உலக சாதனையிலும் இவர்களது பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம், மதுரை சர்வதேச தமிழ் பல்கலைக் கழகம் இத்தம்பதிக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது.