அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் காவல் நிலைய தலைமைக் காவலா் கனகராஜ் (41), காவலா் ராஜன். இருவரும் கடந்த 20.07.2014 அன்று கல்லாறு ஆற்றில் மணல் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (31) கல்லாற்றில் இருந்து டிராக்டரில் மணல் கடத்தி வந்தாா். அவரை தலைமைக் காவலா் கனகராஜ், காவலா் ராஜன் ஆகியோா் நிறுத்தி விசாரித்தனா்.

அப்போது சுரேஷ் திடீரென டிராக்டரை வேகமாக இயக்கினாா். இதில் தலைமைக் காவலா் கனகராஜ் டிராக்டரில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காவலா் ராஜன் பலத்த காயங்களுடன் உயிா் தப்பினாா். இது குறித்து தக்கோலம் காவல் ஆய்வாளராக இருந்த துரை பாண்டியன் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் குற்றவியல் மற்றும் அமா்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.சீனிவாசன் முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.சீனிவாசன், தலைமைக் காவலரை டிராக்டரை ஏற்றிக் கொலை செய்த சுரேஷுக்கு (31) ஆயுள் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.