21-ம் நூற்றாண்டில் கார் இல்லாத நகரம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அப்படி ஒரு நகர் அதாவது உலகலேயே கார் இல்லாத நகரத்தை சவுதி அரேபியா உருவாக்கவுள்ளது. 
உலகின் மிகப் பெரிய கச்சா எண்ணெய் தயாரிப்பாளரான சவுதி அரேபியாவில் கார் இல்லாத நகரம் நகரம் உருவாகவிருப்பது உலகளாவிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு 2030ஆம் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது. 

உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக பல்வேறு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்துவதில் மிக முக்கிய கவனம் செலுத்திவருகின்றன. கச்சா எண்ணெயை நம்பியே இருக்க முடியாது என்பதால் அதற்கு மாற்றான எரிபொருளாக உலக நாடுகள் பசுமை ஹைட்ரஜனை உருவாக்கும் வேலையில் முனைப்புடன் செயல்பட்டுவருகின்றன. 

இதில் மும்முரமாக ஈடுபடுவது கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் கொடிகட்டி பறக்கும் சவுதி அரேபியா தான். வெப்பமயமாதலுக்கு காரணமான கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் மற்றொரு நோக்கத்திலும் சவுதி அரேபியா செயல்பட்டுவருகிறது.

 அந்த வகையில் செங்கடலை ஒட்டிய வடமேற்கு சவுதி அரேபியா பாலைவனப் பகுதியில் நியோம் என்ற எதிர்கால நகரை உருவாக்கும் திட்டத்தின் ஒருபகுதியைத் தான் ’தி லைன்’ (The Line) என்ற பெயரில் இளவரசர் நேற்று (ஜன 10) அறிவித்திருக்கிறார். அதன்படி, 170 கிமீ பரப்பளவில் நகரம் ஒன்றை அமைக்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.

கார்பன் வெளியேற்றத்தைத் தடுக்கும் நோக்கில் இந்நகரத்தில் தெருக்கள் கிடையாது; கார்கள் இயக்கப்படாது; சாலைகள் அமைக்கப்படாது என்று (zero cars, zero streets, zero emissions) தெரிவித்துள்ளார். நம்முடைய வளர்ச்சிக்காக இயற்கையைப் பலியாக்கக் கூடாது என்று இளவரசர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எனினும், நகருக்குள் 20 நிமிடங்களுக்கு மேல் எந்தப் பயணமும் இல்லாத வண்ணம் அதிநவீன போக்குவரத்துக்கான வருங்கால தொழில்நுட்ப தீர்வு கண்டறியப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்துவைத்துள்ள இளவரசருக்கு உலகம் முழுவதிலிருந்து பாராட்டுகள் குவிகிறது.