கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில், சுற்றுலாத் தலங்களில் பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத் தலங்களில் லட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதைக் கருத்தில் கொண்டு, காணும் பொங்கலன்று மட்டும் பொதுமக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அது 3 நாட்களாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்கள், சென்னை கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்துக் கடற்கரைகளிலும், பொங்கல் விடுமுறை தினங்களை ஒட்டி வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் மட்டும், பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் அரசு உத்தரவை மதித்து வருவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.