தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கையில் பார்வையாளர்களை அனுமதி அளித்த தமிழக அரசின் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. படிப்படியாக வழங்கப்பட்ட தளர்வுகளில் நவம்பர் மாதம் 50 சதவிகிதம் பேர் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதற்கிடையே பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர், ஈஸ்வரன் திரைப்படங்கள் சினிமா தியேட்டர்களில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஜய், சிம்பு ஆகியோர் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு ரசிகர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்தாலும் டாக்டர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா எழுதிய கடிதத்தில், தமிழக அரசின் புதிய உத்தரவு திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்ற மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் என்ற உள்துறை அமைச்சகத்தின் உத்தரவை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது. கொரோனா தடுப்பு குறித்து டிசம்பர் 28ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.